Thursday, February 09, 2012

நீரும் தமிழரும் – ௧ (1)


தண்ணீர்! தமிழர்! இரண்டும் உருவான காலந்தொட்டே தொடர்புடைய வார்த்தைகள். நீரே நம் வாழ்விடங்களை தீர்மானித்திருக்கிறது, நம் வாழ்க்கை  முறைகளை தீர்மானித்திருக்கிறது. இன்றைய நிலையில் நம் எதிர்காலத்தையும் தீர்மானிக்கவிருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீருக்கு தமிழர்களாகிய நாம் எத்தகைய கவனம் அளித்திருக்கிறோம்/அளித்திருக்கவேண்டும் என்பதை பற்றித்தான் இனி வரும் பத்திகளில் பார்க்கப் போகிறோம்.(நீர் பற்றிய சமகால அரசியல் சூழலோ,மொழி வாரி வஞ்சனைகளின் ஆராய்ச்சியோ இல்லாது, தண்ணீர் மீதான தமிழர்களின் கடந்த/சம/எதிர்கால ஆளுமைகள் பற்றிய சுயபரிசோதனை மட்டுமே இந்த பதிவின் நோக்கம்)
மிகச் சிறய இனக்குழுவாய்,அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த காலந்தொட்டே தமிழர்கள் நீர் விடயத்தில் தனி கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.இந்த கவனமானது,வெள்ளை அரசாங்கம் இந்த மண்ணில் இருந்த வரை தொடர்ந்தது. புரியவில்லையெனில் நம் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.
நம் நிலப்பாகுபாடே நீரை மையப்படுத்தி தான் இருந்தது. குறிஞ்சி-மலை-சுனை, முல்லை-காடு-ஆறு, மருதம்-நிலம்-குளம்/வாயக்கால், நெய்தல்-கடல்-ஆறு, பாலை-வறட்சி-வானம் என நீரின் இருப்பு/இல்லாமையை வைத்தே அமைத்துக் கொண்டார்கள். பிறகு ஆளாளுக்கு ஆணை,அம்பு,சேனை எல்லாம் சேர்த்து திசைக்கொரு கொடிபிடித்து சண்டையிட தொடங்கிய காலத்திலும், போரின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதில் பெரும் பங்கு நீர் ஆதாரங்களின் மீதான கட்டுப்பாட்டை பொருத்து என்பதாலும், நீரின் மீதான அறிவும் அது சார் மேலாண்மையும் சிறப்பா இருந்தது.  “சும்மா கதையடிக்காதப்பு, என்ன சாட்சி?” வரலாறு முழுக்க நாம சண்டை போட்டுக் கொண்டது தான் சாட்சி. விளங்கிட்டுதா? இல்லையா? சரி விளக்குவோம்!  இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் ஆணை,அம்பு,சேனை மட்டும் போதுமா? உணவு? பல நாட்கள் சண்டை எனில்,உணவு உற்பத்திக்கான தொழில் சக்தியை எல்லாம் போருக்கு திருப்பிவிட வேண்டும், அது மட்டுமில்லாம பல நாள் முற்றுகை செய்யவேண்டிவரலாம்/உள்ளாக்கப்படலாம். போர் கூட எதிர்பார்த்த நாட்களை விட அதிக காலம் நடக்கலாம்.அது வரை உணவு? அதை தயார் செய்யாம/இருப்புவைக்காம போருக்கு போக முடியுமா? உணவு உயிருக்கு ஆதாரம் எனில், உணவு உற்பத்திக்கு? நீர் தான் ஆதாரம்!
போருக்கான முதல் திட்டமிடுதலே நீருக்கான திட்டமிடுதலில் தொடங்கும்.அந்த வகையில் நீர் மேலாண்மையில் அக்காலத் தமிழர்கள் மிகப் பெரும் விஞ்ஞானிகள்.இன்று நாம் பெரிதாக பேசும் நதிகள் இணைப்பெல்லாம் அப்பவே இருந்தது. ஆறு மட்டுமே இயற்கையின் கொடையாய் இருந்தது,வாய்க்கால்,ஏரி,தடுப்பணை(நம்ம கல்லணை கூட தடுப்பணை தான்) கண்மாய்.,ஊருணி இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம். ஆத்துல தண்ணி வந்தா  போதும்,மேல சொன்ன அத்தனையும் தானா நிரம்பும்.எப்படின்னா அத்தனையும் ஒன்றடொன்று இணைக்கப்பட்டது.அட ஆமாங்க interconnected. அதனால் தான் நம் பண்டைய அறிவு எல்லாத்தையும் திட்டமிட்டு ஆழித்த வெள்ளைக்காரன் தண்ணீர் விடயத்தில் மட்டும் கைவைக்கவில்லை. நீர் நிர்வாகம் என்பது கடைசி வரை ஊர் தலைமையிடமே இருந்தது. ஏன்னா அவனுக்கும் நம்ம விவசாயம் தேவையாய் இருந்தது.வியாபாரி இல்லையா? அதனால் அதற்கு எதிரா எதுவும் செய்யலை அவன்.
நீர் சுழற்சி பற்றி அக்கால தமிழர்களின் அறிவானது மிக வியப்பளிக்க கூடியது. எப்போ மழை வரும் எப்போ வெயில் அடிக்கும் எல்லாம் அவுங்களுக்கு அத்துபடி! ஆற்றில் தண்ணீர் மிகுந்து வரும் காலமெது? குறைந்து வரும் காலமெது? என அறிந்து அதற்கேற்றார் போல் திட்டமிட்டு விவசாயம் செய்வதோடு, மராமரத்து செய்தார்கள். நதி மற்றும் வாய்கால் கரைகளில் மரம் வளர்த்தார்கள் கரையை பலப்படுத்த!, அப்போ அப்போ இளைப்பாற!. பெரும்பாலும் வாய்கால் கரைகளில் புளிய மரம் வளர்த்தார்கள், ஏன் தெரியுமா?  நிழலுக்கு நிழல், ஆழமாய் ஓடும் வேர்கள், எல்லாத்துக்கும் மேல புளி! வருமானம்! ஒரே கல்லுல மூணு மாங்காய்!இந்த மர வளர்ப்பும் ஊரில் எல்லார்க்கும் பொதுவானது, அதாங்க வீட்டுக்கு ஒரு மரம்! அதனால் அடுத்தவன் மரத்தை யாரும் வெட்டி விட முடியாது. இப்படி நீர் வரும் பாதை முழுக்க பொருளாதார ரீதியாய் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு ஊர்ல கால்வாய் அகலபடுத்த வேண்டும் என்றால் கடை மடை ஊர்களின் அனுமதி தேவை இருந்தது.
அது மட்டுமல்லாது இந்த நீர்வழி பாதைகளில் ஒரு எளிய விஞ்ஞானம் புகுத்த பட்டிருந்தது. என்ன தெரியுமா ?
அடுத்த பதிவில் அது பற்றி பார்க்கலாம் …….
-எடு சாட்டை.

இரண்டாம் பாகம் - நீரும் தமிழரும் – ௨ (2)

No comments:

Post a Comment