Sunday, May 06, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -பகுதி ௧(1)

வாழ்கையை பயணமாக பார்ப்பவர்கள், வாழ்க்கையே பயணமாகி போனவர்கள் என்ற மனிதர்களுக்கு இடையே "பயணங்களில் வாழ்கையை படிப்பவன் நான்" என்ற சுயவிளம்பரத்தோடு இந்த பதிவை தொடங்குகிறேன்! அரை காத தூரமோ, ஆயிரம் மைல் பயணமோ, எல்லா பாதைகளும் எனக்கான பாடங்களை கொண்டே சமைக்கப்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்வேன்! அத்தகைய ஒரு சமீபத்திய பயணத்தின் அனுபவமே இந்த பதிவு. 


அலுவல்கள் சாராத என் பயணங்கள் எதுவும் பயணிக்க தொடங்கும் கடைசி நொடி வரை நிச்சயமற்றதே! அதுவே பழகி போனது! ஆதலால் முன்னேற்ப்பாடுகள் பற்றி அதிகம் அலட்டி கொள்வதில்லை நான். இந்த குறிப்பிட்ட பயணத்தில் என் நண்பர்கள் பலரும் உடன் வருவதாய் இருந்ததால் ஏற்பாடுகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

கோவையிலிருந்து கோழிக்கோடு-மங்களூர் வழியாக கோவா சென்று இரண்டு நாள்கள் தங்கிவிட்டு மீண்டும் அதே பாதை வழியாக திரும்பி விடும் திட்ட உத்தேசத்தோடு தொடங்கியது பயணம்.

மொத்த நபர்கள் : 8 // வாகனம் : Mahindra XYLO  // கிளம்பிய நேரம் : 16:30, 27-Apr-2012

எல்லா பயணங்களையும் தாமதப்படுத்த கடைசியாய் வருபவர்களும் / எல்லோரையும் எரிச்சல்படுத்தவே உடன் வருபவர்களும் எல்லா குழுவிலும் உண்டு. எங்கள் குழுவும் இந்த விதிக்கு உட்பட்டதே. தொடங்கிய அரைமணிக்குள்ளாக, குனியமுத்தூர் பேக்கரி ஒன்றில் ஆளுக்கு இரண்டு "அரபியன் சவர்மா" மாலை நேர மேய்ச்சலானது!

கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் அத்தியாவசிய பொருட்களோடு சாரிசாரியாய் அதிகாரிகளின் ஒப்புதலுக்காய் காத்துக் கிடக்கும் சரக்குந்துகள் (Loaded Vehicles = LORRIES). இந்த அதிகாரிகளின் ஒரு நாள் லஞ்ச வருமானம், இந்த பொருள்களின் விலையாகத்தானே நுகர்வோர் தலையில் சுமத்தப்படும் என்று பொருளாதார கேள்வி கேட்டது மூளை. கேரளத்தின் வனப்பை பார்! மூளைக்கு கட்டளையிட்டது பசுமையையும் பெண்களையும் கண்ணுற்ற கண்கள்! மூளை அடிபணிந்தது!

இத்தனை வனப்பும், வளமும், இயற்கை எழிலும் நிரம்ப பெற்ற கேரளம் ஒரு வேளை உணவுக்காக மற்ற மாநிலத்தை எதிர்பார்க்கிறது. உலகில் எல்லா மூலையிலும் ஓடி உழைக்கும் மலையாளிகள், தம் சொந்த மண்ணில் உழைப்பது ஒப்பீட்டளவில் குறைவு! உலகிலயே மலையாளிகள் மட்டும் தான் உழைப்பதற்காக உலகின் பிற பகுதிகளுக்கும், சுற்றுலாவிற்காக தம் சொந்த மண்ணுக்கும் செல்பவர்கள் போலும்!

நெடுஞ்சாலைகள் எனும் பெயர் கேரளத்திற்கு ஒருபோதும் பொருந்தாது, எல்லாம் "வளை"சாலைகளே. மலையாளத்தில் புதிதாக பயணிப்பவர்களுக்கு கேரள பெண்களின் வளைவுகள் எத்தனை இதந்தருமோ அத்தனை இம்சை தரக்கூடியவை வளைந்து-நெளிந்து செல்லும் சாலைகள் (இந்த வளைவு-நெளிவுகளை ரசிப்பவர்களும் உண்டு). 30 அடி சாலைகளை கூட தேசிய "நெடுஞ்"சாலையாய் அறிவித்துக் கொள்கிறார்கள். நெடிய பயண முடிவில் ஓட்டுனருக்கு வேறு இரண்டு கால்கள் வாங்கித்தர வேண்டும். நல்லவேளையாக எங்கள் குழாமில் நண்பர்களே ஓட்டியதால் மாறி மாறி ஓட்டுனர் பதவியை பகிர்ந்துகொண்டார்கள்.

என்ன தான் கேரள பெண்கள் தைரியத்தில் சிறந்தவர்கள் என்றாலும் இரவு ஏழு மணிக்கு மேலாக அவர்களை சாலையில் காண்பது அரிதே. எட்டு மணிக்கெல்லாம் ஊரே அடங்கி விடுகிறது, அது நகரமாய் இருந்தால் கூட. தமிழகத்தின் சின்னச்சிறு "டவுன்"கள் கூட பத்து மணி வரை மக்கள் வெள்ளத்தால் ஆர்பரித்து கொண்டிருப்பதை பார்த்து பழகியவர்களுக்கு இந்த கேரள "ஊரடங்கு" விசித்திரமானதே.

லிப்ட்க்கு உள்ளே கண்ணாடி வைக்க யோசித்தவனுக்கு பிறகு வாகனங்களில் இசைகேட்கும் வசதி செய்து கொடுத்தவனே உலகின் மிக பெரும் "Innovator" என்பது என் கருத்து. இந்த வசதி மட்டும் இல்லையென்றால் இளையராஜா உழைப்பெல்லாம் வீணாகத்தான் போயிருக்கும். பாதைகள், பாடல்கள், முன்னிருக்கைத் தோழன் ஆகிய துணைகளுடன் பயணத்தை சலிக்காது தொடர்ந்து கொண்டிருந்தான் ஓட்டுனர் வேடமேற்ற நண்பன். தோளில் சாய்ந்து உறங்கி போனவனின் தலையில் தலையை சாய்த்து கொண்டு, இருக்கைக்கும் கதவுக்குமான இடைவெளியில் முகத்தை மறைத்து கொண்டு, மடியில் பையை வைத்து அதன் மீதினில் தலையை கிடத்தியவன், அவன் முதுகில் கைகள் மடித்து தன் முழு எடையையும் பரத்தி கொண்டவன், என ஒவ்வொரு தினுசாக உறங்கிப் போயிருந்தோம்.

மங்களூர் தாண்டி ஒரு பெட்ரோல் பங்கில் இளைப்பாறி கொண்டிருந்தது வண்டி.உள்ளே சகலரும் உறங்கி கொண்டிருக்க எனக்கு மட்டும் விழிப்பு. வாகனம் விட்டு நான் இறங்குவதற்குள் இன்னும் இருவரை எழுப்பியாகி விட்டேன். அதிகாலை வேளையில் சாலையில் விரையும் வாகனம் ரசித்தோம்.

விடிகாலையில் அடுத்தவன் இழுத்து விடும் சிகரெட் புகையை கொஞ்சமேனும் உள்வாங்குவது அருமையான தேநீர் அருந்தியதற்கு இணையானது. என் பொது புத்தியில் உறைந்துவிட்ட இயல்பான கர்னாடக வெறுப்பை கடந்த உண்மை என்னவனில், கர்னாடக தேநீர்கள் அத்தனை சுவையில்லை என்பதே. ஆதலின் நண்பனின் நாசி வழிந்து, காற்றில் மெல்ல என் சுவாசம் நனைத்த சிகரெட் புகையோடே திருப்திபட வேண்டியதானது.

மேற்கு தொடர்ச்சி மலைகளின் அப்புறத்தில் வளைந்து நெளிந்து செல்லும் இந்த கடற்கரை சாலைகள், நாளும் விரையும் ஏராளமான சரக்குந்துகளின் எண்ணிக்கையையோ, எடையையோ கணக்கில் கொள்ளாது போடப்பட்ட காரணத்தால் தம் பொலிவிழந்து, பயணிகளின் பொறுமையை சோதிக்கும் களமாகி கிடக்கின்றன. இதனோடு ஒப்பிடுகையில் சென்னை - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை பிரம்மிப்பானது.

தொடர்ச்சியான பயணங்களின் சுவையாரம் இனிக்க இனிக்க பேசும் நண்பர்களாலும், மாறி மாறி கோமாளி வேடமேற்கும் அனைவரது கைகளிலுமே உண்டு. சாதாரண கேலிகளை கூட உணர்வுப்பூர்வமாக அணுகுபவர்களுடனான பயணத்தை போல சாபமானது ஏதுமில்லை, அது வாழ்க்கை பயணமென்றால், அந்தோ பரிதாபம்!

ஒரு வழியாக கோவா வந்தடையும் போது நேரம் நண்பகல் பன்னிரெண்டு. இருபது மணி நேர நெடும்பயணத்திற்கு பிறகு, ஏற்கனவே இணைய வழி முன் பதிவு செய்த அறைகளின் படுக்கைகளில் மிக்க சோர்வோடு படுத்துறங்கினோம்.

தொடரும்.....

-ரகு

முதல் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௧(1)
இரண்டாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௨(2)
மூன்றாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௩(3)
நான்காம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௪ (4)

29 comments:

 1. விசயத்தை சொல்லும் ஸ்டைல் ஆரம்பம் முதல் முடிவுவரை பிசிறு தட்டவே இல்லை! எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது. 80களின் எழுத்து! அலாதியான ஒன்றுதான்!

  அன்பின் ராஜன்

  ReplyDelete
  Replies
  1. உம்ம பாராட்டு இன்னும் கவனமா எழுத சொல்லுது. நன்றி ராஜன்!

   Delete
 2. ஜூப்பரப்பு - ராக்கெட்டு

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராக்கெட்டு

   Delete
 3. yes..

  நல்ல எழுத்து.. பதிவுகளில் அதிகம் காணமுடியாத விஷயம் பயணக்கட்டுரை.. மற்ற தலைப்புகள் போல் குன்சாக அடித்து விட முடியாது என்பதும், அதிகம் உழைப்பை கோரும் விஷயம் என்பதாலும் ”பிரபல” பதிவர்கள் கூட அதிகம் எழுதவதில்லை. அடர்த்தியான விஷயம் ஏதுமில்லை என்றாலும் நடையும், உம் அனுபவத்தோடு மற்ற பெர்சனல் விஷயங்களை கலந்து சொல்லும் விதத்திலும் அதிகம் கவர்கிறது..

  தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. என் முந்தைய பதிவுகள் எல்லாம் DRY-யாக இருப்பதாக பொதுவான குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அதான் புது முயற்சியா எழுதலாம் என்று ஒரு சுயபரிசோதனை இந்த பதிவு.

   கருத்துகளுக்கு நன்றிகள்

   Delete
 4. ஒரு ரசனைப் பதிவு

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததற்கு நன்றிகள்!

   Delete
 5. Replies
  1. நன்றி அண்ணாச்சி!

   Delete
 6. முதல்ல பாராட்டவேண்டிய விடயம் தலைப்பு "ஊரோடியகதைகள்".. நல்ல எழுத்து நடை ... நான் மிக சமீபத்தில் மூணாறு பயணம் போய்வந்திருப்பதால் மிக எளிதாக இந்த பயண உணர்வை அடைய முடிகிறது ..எழுத்துபிழைகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து எழுதுங்க :) வாழ்த்துகள் ரகு

  ReplyDelete
  Replies
  1. நன்றி அன்பு.

   எழுத்துப்பிழைகளின் உடனான எனது உறவு மிக ஆழமானது. இந்த உறவை வெட்டி விட முயன்று கொண்டே இருக்கிறேன். விரைவில் நடக்கும். கருத்துகளுக்கு நன்றிகள்.

   Delete
 7. //சாதாரண கேலிகளை கூட உணர்வுப்பூர்வமாக அணுகுபவர்களுடனான பயணத்தை போல சாபமானது ஏதுமில்லை, அது வாழ்க்கை பயணமென்றால், அந்தோ பரிதாபம்!// - ஒரு பயணக்கட்டுரையில் இது போன்ற உள்ளார்ந்த கருத்துக்கள் இருப்பது வியப்பே.. மிக நல்ல நடை. Hats off Ragu :)

  ReplyDelete
  Replies
  1. பயணம் என்பது பல நினைவுகளை கிளரும் ஒரு மாய வலை. அந்த பயணத்தோடு சிறிதும் சம்பந்தமற்ற நினைவுகள் மொத்த பயணத்தையும் ஆக்கிரமித்த அனுபவங்கள் எல்லோருக்கும் பொதுவானது. பெரும்பாலும் அவைகள் உள்ளத்தின் அடி ஆழத்தில் வலுக்கட்டாயமாய் மறைக்க பட்டுவிடுகின்றன. அதை வெளிக்கொணரும் பொது இத்தகைய ஒப்புமைகள் சாத்தியமாகி விடுகிறது.

   கருத்துகளுக்கு நன்றிகள்.

   Delete
 8. ஒரு பயணக்கட்டுரை எழுத முனைந்ததற்கு வாழ்த்துகள். // மலையாளத்தில் புதிதாக பயணிப்பவர்களுக்கு கேரள பெண்களின் வளைவுகள் எத்தனை இதந்தருமோ அத்தனை இம்சை தரக்கூடியவை வளைந்து-நெளிந்து செல்லும் சாலைகள் (இந்த வளைவு-நெளிவுகளை ரசிப்பவர்களும் உண்டு) // அனுபவ வரிகள். :-)

  ReplyDelete
  Replies
  1. நீயும் அனுபவிச்சிருப்ப போல ..... ஹ்ம்ம்....

   கருத்துகளுக்கு நன்றிகள் கருப்பு.

   Delete
 9. அருமை நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 10. Replies
  1. நன்றி அப்பு!

   Delete
 11. //சாதாரண கேலிகளை கூட உணர்வுப்பூர்வமாக அணுகுபவர்களுடனான பயணத்தை போல சாபமானது ஏதுமில்லை, அது வாழ்க்கை பயணமென்றால், அந்தோ பரிதாபம்!// - வாவ். மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி போக்கிரி அவர்களே! தத்துவம் எழுதுரமே எல்லோருக்கும் பிடிக்குமா என் யோசித்தபடியே சேர்த்த வரிகள் அவை! நிறைய பேருக்கு பிடித்தது போல! நன்றிகள்!

   Delete
 12. இன்னும் ஊரு போயி சேரலையா ..!

  நானு மாசத்திலே ஒரு தடவையாவது பிரயாணப்படும் ஒரு ஊர் இந்த கோவா.

  அதனாலோ என்னவோ.. அந்த ஊரைப்பத்தி இந்த மனுஷன் அப்படி என்னதான் எழுதுவார்ன்னு பாக்கலாம்ன்னு பீர் பாட்டில தொறந்து வைச்சிகிகிட்டு ஒக்காந்திருக்கேன்..!

  ஆரம்பம் அசத்தல்.
  கண்ட காட்சிகளின் வர்ணனைகள் தறி கெட்டு ஓடாமல் இருப்பதால் திகட்டாமல் கற்பனைக்குள்ளே அடங்கி இருக்கிறது..! அதான் படிப்பதற்கு சுவராஸ்யம் கூட்டுகிறது..!

  ருசிக்கத் தயாராக இருக்கிறேன்..! நீங்க ஊருக்குள் செல்லுங்கள் . ;-))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! அப்போ பொய்யா எதையும் அடித்து விட முடியாது, கண்டுபிடிச்சிருவீங்க. நல்ல முறையில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

   கருத்துகளுக்கு நன்றிகள்

   Delete
 13. பொறாமையா இருக்கு உங்க எழுத்து நடை மீது !!
  சாட்டை இப்போ ஒரே சேட்டை பண்ணுது...தொடரட்டும் சாட்டையுடன் சேட்டையும் :)))

  ReplyDelete
  Replies
  1. இப்போத்தான் வாறீங்க? ஹ்ம்ம்..... பாத்துக்குறேன் ..... இதுவே சேட்டையா? இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. நன்றிகள்

   Delete
 14. நாம் பயணித்த போது கிடைத்தது ஆனந்தம், உன் பயணக்கட்டுரையைப் படித்ததால் கிடைத்தது பேரானந்தம்

  - அருண் சசிவர்ணம்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிடா... பொய்யா எதுவும் எழுதல.... இருந்தா சொல்லுடா.......

   Delete
 15. இத்தனை வனப்பும், வளமும், இயற்கை எழிலும் நிரம்ப பெற்ற கேரளம் ஒரு வேளை உணவுக்காக மற்ற மாநிலத்தை எதிர்பார்க்கிறது. உலகில் எல்லா மூலையிலும் ஓடி உழைக்கும் மலையாளிகள், தம் சொந்த மண்ணில் உழைப்பது ஒப்பீட்டளவில் குறைவு!
  nice man keep it up...வாழ்துக்கள்

  ReplyDelete