Saturday, May 26, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -பகுதி ௩(3)

விடுதி வாசலில் எங்கள் மூவரையும் இறக்கிவிட்டு நண்பர்களோடு நகர்ந்த வாகன இரைச்சல் அடங்கிய போது மனம் சத்தமிட தொடங்கியிருந்தது! தனக்கு தானே சட்டமிட்டு கொள்வதிலும், பின்பு அதற்காக தன்னுள்ளேயே சத்தமிட்டு கொள்வதிலும் மனதிற்கு நிகரேதுமில்லை! களைப்பு ஒரு புறமும், கட்டுப்பாடுகள் மறுபுறமும் கடிவாளம் போட்டு வைத்திருந்த மனது படுக்கைக்கு போனதும் தறிகெட்டு ஓடத் தொடங்கியது! தொலைகாட்சி அலைவரிசையில் ஆசுவாசம் செய்து கொள்ள முயன்று கொண்டிருக்கையில் அலைபேசி அழைப்பு!


நண்பர்கள் விசித்திரமானவர்கள்! இன்பத்தை தருவதிலும் சரி! எரிச்சலை தருவதிலும் சரி! கடற்கரையில் தங்கள் கண்களுக்கு விருந்தாவதை எல்லாம் அப்படியே காட்சிப்படுத்தி கொண்டிருந்தார்கள்! "நாமும் போயிருக்கலாம்" என்ற எண்ணம், இருந்த கொஞ்ச நஞ்ச போதையையும் குடித்திருந்தது! நம்மை வெறுப்பேற்றும் ஆயுதத்தை கூர்தீட்டி கொண்டிருப்பவர்களுக்கு 'வலி(ழி)யை' வெளிக்காட்டினால் அவ்வளவுதான்! சதக்! சதக்!

"விருப்பமில்லாதது போலவும்", "இதில் என்ன இருக்கிறது?" என்பது போலவுமான நடிப்புகளை எத்தனை சாதுர்யம் மிக்கவர்களாலும் "பிசிறு" தட்டாமல் நடிக்க இயலாது. "தூக்கம் வருது மச்சி" என்ற வார்த்தைகளில் ஏக்கத்தை மறைத்து கொண்டேன்.

கரைநெடுக நடந்த சல்லாபங்கள் பார்த்துவிட்டு, சரசத்துக்கான வாய்ப்புகள் ஏதும் கிட்டாது, ஏக்கப் பெருமூச்சோடு நண்பர்கள் அறைக்கு வருகையில் முகம் தெரியாத பெண்ணோடு கனவில் ஏதேனும் கடற்கரை மணல் பரப்பில் அலையாடி கொண்டிருந்திருப்பேன் நான்!

சாராயங்களை தோற்பிக்கும்  வல்லமை வாய்ந்த ஒரே போதை தூக்கமே. இன்பங்களை துன்பங்களாகவும், தோல்விகளை சாகசங்களாகவும், நேரில் பார்த்தறியாதவரோடு கூட படுத்தெழுவதாகவும் மாயதோற்றம் காட்ட தூக்கமெனும் பெரும் போதையால் மட்டுமே சாத்தியம்.

அகுடா கோட்டை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தது வாகனம்! வழியில் சில மதுவகைகள் வாங்கினோம், அவரவர் ரசனைக்கு ஏற்ப! எனது தேர்வு எப்போதும் 'வோட்கா+பழரசம்' அல்லது 'பக்கார்டி வித் ஸ்ப்ரைட்'! வோட்காவில் ஆரம்பித்து பக்கார்டியில் முடிக்கலாம் என்ற முன் முடிவோடு இருந்தேன்! ஆரம்பத்திலே "மட்டையாகி" விடுவதில் உள்ள சிரமங்கள் தூக்கி சுமக்கும் நண்பனாய் இருந்தால் தான் புரியும் என்பதை அனுபவங்கள் வாயிலாய் உணர்ந்தவன் என்பதால், அத்தகைய தவறுகளை தவறியும் செய்வதில்லை நான்!

கேட்காமலே ஆயிரமாயிரம் கதைகள் சொல்வதில் கோட்டைகள், குழந்தைகளுக்கு நிகரானவை! கோட்டைகளில் நடை பழகும் போது 'ராஜா'வாக, 'வீரத்தளபதி'யாக, 'இளவரசி'யாக மனதளவில் எண்ணிக் கொள்ளாதவர் என்று யாருமே இருக்க முடியாது. ராணியாய் இருப்பதை விட இளவரசியாய் இருப்பதில் தான் பெண்களுக்கு ஆர்வம் அதிகம் என்பது இன்று வரை புரியாத புதிரே!


எதிர்காலத்துக்காக இறந்தகாலத்தை சேமித்துக் கொள்வதற்கான சிறு முயற்சி தான் நிகழ்காலத்தை நிழற்படம் பிடிப்பதென்பது!


சல்லாபம் இல்லை, சாகசமும் இல்லையென்றால் 'கோவா'வேன் போவது என்ற கேள்விகள் எழுந்த நேரத்தில், பாராசூட் பயணத்திற்காக பேரம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த மாலையின் கடைசி "பறவையாளர்கள்" நாங்கள். அஸ்தமிக்கும் சூரியனை ஆகாசத்தில் இருந்தபடி வேடிக்கை பார்த்தோம். அலைகளோடு பயணித்த அந்த படகு பயணத்தை ஒப்பிடுகையில் பறந்ததெல்லாம் ஒரு சாகசமே அல்ல!

பாதைகளும், வழிசொல்லும் பதாகைகளும் மட்டுமே கோவாவை வழிநடத்துவது போன்ற உணர்வு! ஒரு முறை சொடுக்கிய சாட்டையில் இருந்து கழன்று ஏதோ ஒரு ஒழுங்கில் சுற்றும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறது கோவா! இருந்த மூன்று நாட்களில் மொத்தமாய் பார்த்தது ஐந்தே ஐந்து காவலர்கள் தான். கண்காணிப்பு / மேற்பார்வை எல்லாம் இருக்கிறதா ? என்றே தெரியவில்லை. கோவா செயல்படும் விதம் உண்மையிலயே அட்டகாசம் தான்!

சிகிரெட் 'பிடிக்கும்' எத்தனை பேருக்கு "ஹூக்கா" பிடிக்குமென தெரியாது! எனக்கு 'ஹூக்கா' பிடித்த அளவு சிகிரெட் பிடிக்காது! குறைந்த நிமிடங்களே நிலைத்திருக்கும் என்றாலும் ஹூக்கா தரும் போதை அலாதியானது! அதுவும் அலைகடலை ரசித்த படி கடற்கரையில் "ஹூக்கா"...... ஹூ........யா............

இரைப்பையை அரித்து கொண்டிருந்தது நாள் முழுக்க அருந்திய மது! உணவிற்கு முன் மிதவை பயணம் என்ற நண்பர்கள் ஆசைக்கு துளியளவும் உடன்வர மறுத்தது உடல்! வழக்கம் போல உடலோடு வேறுபட்டு நின்றது மனம்.....வென்றது எது?

தொடரும்...

-ரகு

முதல் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௧(1)
இரண்டாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௨(2)
மூன்றாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௩(3)
நான்காம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௪ (4)

2 comments:

  1. //முகம் தெரியாத பெண்ணோடு கனவில் ஏதேனும் கடற்கரை மணல் பரப்பில் அலையாடி கொண்டிருந்திருப்பேன் நான்//

    அடா அடா அடா....
    என் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ரகு:)

    ReplyDelete
  2. //கேட்காமலே ஆயிரமாயிரம் கதைகள் சொல்வதில் கோட்டைகள், குழந்தைகளுக்கு நிகரானவை!// & //ராணியாய் இருப்பதை விட இளவரசியாய் இருப்பதில் தான் பெண்களுக்கு ஆர்வம் அதிகம் என்பது இன்று வரை புரியாத புதிரே!// சூப்பர் ரகு... ரசித்தேன் :))

    ReplyDelete