Tuesday, July 17, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -பகுதி ௪ (4)

கடற்கரைக்கு சென்றுவிட்டு கப்பல் பயணம் செய்யாமல் வருவதென்பது காதலிக்கு "சைவ முத்தம்" கொடுப்பது போல, நல்லவேளையாக நான் அசைவம்! களைத்துப்போன உடலுக்கு கப்பல் பயணம் ஏற்றதல்ல என்றாலும் ஒருநாள் கூத்துக்கு இந்த வியாக்கியானம் எல்லாம் சரிப்பட்டு வராது என்பதால் துணிந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் ஏறியது தான் அன்றைய இரவின் இறுதி கப்பல் பயணம். தலைக்கு 200 ரூ. என அரைமணி நேர பயணம், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் முகாந்திரமாய். வேண்டா வெறுப்பாக சுவையாரமற்றுதான் தொடங்கியது இந்த பயணம், அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று உடற்சோர்வு, மற்றொன்று இறுதி பயணமாதலால் யுவதிகள் வெகு குறைவு.கோவாவின் பாரம்பரிய நடனங்களும், மேலை நாட்டு நடனங்களும் என நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கி கொண்டிருந்தார், பிறகு பயணிகளில் 5 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான நடனம் என்ற அறிவிப்பு. ஆக குழந்தைகள் முதலில், இணைகள் அடுத்து, யுவதிகள் அதற்கடுத்து, கடைசியாய் காளையருக்கும் இந்த நடனம் இருக்குமென சட்டென மூளை கணக்கு போட தொடங்கியிருந்தது. மூளை கணக்கு போட்டு முடிப்பதற்கும் குழந்தைகள் ஆட தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.

எந்த இசையோடும் ஒட்டாமல் தம் மனதிற்கு பிடித்தபடி தப்பும் தவறுமாக ஆடுவதால் தான் குழந்தைகள் நடனமாடுகையில் நமக்கும் குதூகலம் வந்து விடுகிறது. குழந்தைகள் நடனத்தை தொடர்ந்து இணைகளின் நடனம். இணைகளில் புதுமண தம்பதிகளை விட நாளான தம்பதிகளின் நடனத்தில் இருக்கும் நெருக்கம் பார்வையாளர்களை ஒரு வித கிளர்ச்சிக்கு உள்ளாக்கியதன் சூட்சமம் அன்று புரியவில்லை, இன்று புரிய தொடங்கியிருக்கிறது. பிறகு யுவதிகளின் நடனம். வெட்கமென்பது இந்திய பொது குணம் போல, நான் தமிழரின் தனிக்குணம் என எண்ணியிருந்தேன். மிக குறைவான நங்கைகளே மேடையேறி இருந்தனர். அவர்களில் ஆடியவர்கள் அதைவிட குறைவு. கண்ணுக்கினியன காணுதல் இன்பம்.

யுவதிகளின் நடனம் முடிவுற்ற பொழுது கப்பல் கரை தேடி பயணத்தை தொடங்கியிருந்தது. இறுதியாக இளைஞர்களுக்கான தனி நடனம்! மேடை கொள்ளவில்லை, ஆரம்பத்தில் வராமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிலரும் கூட மெல்ல மேடையேறிவிட்டனர். ஹிந்தி பாடல்களின் இடையிடையே தமிழ் பாடல்களும் ஒலிபரப்பானது கூடுதல் குதூகலம். நாள் முழுக்க அலைந்ததில் அத்தனை சோர்வாய் இருந்த உடல் எப்படி அப்படி ஒரு ஆட்டத்தை ஆடியது என்றே தெரியவில்லை. திடீரென அவ்வளவு புத்துணர்ச்சி ஏற்பட்டது எப்படி என்றே தெரியவில்லை. இத்தகைய நிகழ்வு "வாழ்-மரண போராட்டத்தில்" முக்கிய பங்காற்றுவதாக அறிந்ததுண்டு. உடல் சோர்வுற்று, பசிமயக்கத்தில் இருக்கும் ஒருவன் தன் உயிரை காத்துக்கொள்ள ஓடியே தீர வேண்டுமென்றால் உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் "ரிசர்வ்-கார்போஹைட்ரேட்ஸ்" இத்தகைய அசாத்தியமான தருணங்களில் மட்டுமே வெளிப்பட்டு பயன்தருமாம். ஏனெனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த கடைசி துளிச்சத்தை  வெளிக்கொணர  அசாத்தியமான புறக்காரணிகள் மிக அவசியம்.

தூங்கா நகரம் என்பது மதுரைக்கு பொருந்துவது போலவே கோவாவிற்கும் பொருந்தும், என்ன அங்கு இரவில் சுடச்சுட பரோட்டா கிடைக்காது, ரொட்டியோடு திருப்தியடைந்து கொள்ள வேண்டியது தான். நண்பனொருவனை மது முழுதும் குடித்திருந்தது, ஆனாலும் சுயத்தை இழக்காதிருக்க மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தானவன். அவன் புறத்தோலை உரித்து அகத்தை காணும் பெரு முயற்சியில் இறங்கி கொண்டிருந்தோம் நாங்கள். அத்தனை போதையிலும் தோழிகள் பற்றிய பேச்சுகளில் நண்பன் காட்டிய அதீத கவனம் என் "கவனத்தை" பெரிதும் ஈர்த்தது. இம்மாதிரியான போதையில் நானெல்லாம் நானாகவே இருந்திருக்கும் சாத்தியம் வெகு குறைவே.

முழு களைப்போடு படுக்கைக்கு செல்பவனுக்கு கனவை விட சிறந்த எதிரி கிடையவே கிடையாது. அதுவும் எனது வழமையான கனவுகள் யாவும், புதைமணல் ஓட்டமாகவும், வாழ்-மரண போராட்டமாகவும், வலிய புணரும் வகையினதாகவுமே இருக்கும். விடிந்து எழும்போது அயர்ச்சி அதிகரித்து இருக்குமே ஒழிய ஆசுவாசமாக இருக்கவே இருக்காது.அம்மாதிரியான ஒரு இரவாகத்தான் அன்றைய இரவும் கழிந்தது.

நாளை என்ன என்பது தெரியாத வரை தான் வாழ்வில் சுவையாரமே! என் வாழ்க்கை இந்த நொடி வரை அப்படித்தான். விடிந்ததும் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றிய முடிவை விடியலுக்கு விட்டுவிட்டு இரவோடு 'மல்லு'க்கட்டி கொண்டிருந்தேன்...

அடுத்த பதிப்பில் முடிவுறும்..

-ரகு

முதல் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௧(1)
இரண்டாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௨(2)
மூன்றாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௩(3)
நான்காம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௪ (4)

4 comments:

 1. புதியதோர் எழுத்துப்பேழை.. புரட்டிப்பார்க்க விழைந்தவன் புதைந்தே விட்டேன்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள், பிழைத்திருத்தி!

   Delete
  2. கோவாவின் கப்பல் நடனம் பிரசித்தி பெற்றதே. ஆனால் நீங்கள் மேல் தளத்தின் ஆட்டத்தை பற்றி மட்டுமே கூறியதை பார்த்த பொழுது, இரண்டாம் தள ஆட்டம் பற்றி நீங்கள் அறியவில்லை என்றே நினைக்கிறேன். அத்தளத்தில் யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் ஆடலாம். அல்லது, நீங்கள் போனது Single deck எனப்படும் ஒரு தளக்கப்பலாகவும் இருக்கலாம். இருதளக் Double deck கப்பலில் இவ்விருவகை நடனங்கள் உண்டு. கூடதல் வசதியாக இரண்டாம் தளத்தில் பீர் அருந்திக்கொண்டே ஆடலாம். முன்பின் தெரியா யுவதிகளும் உடன் ஆடுவார்கள்.

   Delete
  3. நாங்கள் சென்றது அன்றைய பொழுதின் கடைசி பயணமாதலால், கீழ் தளத்தில் அந்த நிகழ்வுகள் நடக்கவில்லை. அது இரு தளக்கப்பல் தான்! :(

   Delete