Sunday, August 19, 2012

போகிற போக்கில்...

வெகுநாளாகிவிட்டது  பதிவெழுதி, ஏதேனும் எழுதி என்னுள் எழுந்து , குப்பையாய் நிறைந்து கிடக்கும் எண்ணத்தை எல்லாம் கூட்டிப்பெருக்கி வெளியில் கொட்டினால் தான் புதிய எண்ணங்கள் பிறக்க இடமேற்படும் என்ற யோசனையில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

"அசாம் கலவரத்தை பற்றியெல்லாம் யாரும் அறச்சீற்றம் கொள்வதில்லையே, ஏன்?"
"தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வருதாமே?" 
"வெலிக்கடை சிறை படுகொலை நாள் யார் நினைவையும் எட்டாமல் போனதே?"
"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் கதையாக, பூனேயிலும் பெங்களூருவிலும் வடகிழக்கு இந்தியன் அடிவாங்குகிறானே?"
"மதுபானக்கடை படம் நல்லாயிருக்காமே?"
"சன்னி லியோன் கவர்ச்சி நடிகை என்றுதானே இன்னும் சிலர் எண்ணி கொண்டிருகிறார்கள்?" 
"தமிழ்நாட்டுல இருந்து ஒலிம்பிக்குக்கு யாருமே போகலையாமே?"

இன்னும் விடுபட்டு போன கேள்விகள் எத்தனை எத்தனை? ஒன்றொன்றுக்கும் லேட்டஸ்ட் ஹிட் "ராஜு முருகன்" பாணியில் கட்டுரை எழுதியிருந்தால் பிரபல பதிவர் என்ற பெயரை கொஞ்சம் கைப்பற்றி இருக்கலாம், இல்லையென்றால் "பேயோனிசம்" முயன்று இலக்கிய பாதை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருக்கலாம். அதெற்கெல்லாம் நேரமேது ? "நேரமே இல்ல சார்" எனச்சொல்ல ஏதாவதொரு காரணம் இருக்கிறது எல்லோருக்கும், எனக்கும் இருக்கிறது, "சுகமானதொரு காரணம்". இப்படி பொதுமையான சொல்லாடல்களில் தான் தனித்துவமான "சுயம்" தொலைந்து போகிறது.

அசாம் கலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தில் தேடினால், சன்னி லியோனுக்கு வரும் உரலிகளில் பாதி கூட வரவில்லை. சன்னி லியோன் இந்திய பெற்றோருக்கு கனடாவில் பிறந்த பெண், மிகப்பெரிய நீலப்பட நடிகை, துறைசார் விருதுகள் வென்றவர்! இப்போது சமீப காலமாக உடை அணிந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அசாம் கலவரம் ஏன்? வங்காளதேசத்தில்  இருந்து கள்ளத்தனமாக குடியேறி வாழுபவர்களுக்கும், வடகிழக்கு பூர்வகுடிகளுக்கும் இடையே நிகழ்ந்த இன மோதல். முப்பது வருடங்களாகவே நிகழும் இந்த உரசல் அவ்வப்போது பெரும்  சண்டையாய் மூளும். இப்போதும் அவ்வாறு மூண்டிருக்கிறது. இலங்கையில் நடந்ததை போல இதுவும் இன மோதல்தான், இந்த இனமோதலில் மதம் பிரதான காரணி! வாக்குச்சீட்டு அரசியல் அடுத்த காரணி! சட்டவிரோதமாக குடியேறும் இவர்களின் வாக்கு வங்கி மறுக்க முடியாத சக்தியாக மாறிவிட்ட காரணத்தால் அரசுகள் ஆரம்பத்தில் வேடிக்கை தான் பார்க்கும், அப்புறம்  தான் துப்பாக்கி சகிதம் நாட்டாண்மை செய்ய வரும். உயிர்கள் மலிவாக கிடைக்கும் தேசம் தானே இது. வழக்கம் போல துணை ராணுவம், துப்பாக்கி சூடு,ஊரடங்கு, என்று அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ஒரு நூறு உயிர்கள் பலியாகிவிட தற்காலம் , தற்காலிக அமைதி ஏற்பட்டிருக்கிறது. 

தேசியவாத-மக்களாட்சி அரசுகள் அமைய ஆரம்பித்த பிறகு வரைபடகோடுகள் எல்லைகோடுகள் என்ற பரிமாணம் அடைந்த பிறகு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேசியம் என்ற முத்திரை அவர்கள் முகங்களில் குத்தப்படுகிறது. முப்பது கிலோமீட்டர் பரப்பளவில் மூன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் கூட இருக்கின்றன. அவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளின் அளவு, வீரியம் பொறுத்து வாக்கு வங்கி அரசியல் வளர்ச்சியுறும்.

வெலிக்கடை சிறையில் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இறந்த தினம்; மன்னிக்க, கொல்லப்பட்ட; மறுடியும் மன்னிக்க, புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்ட தினம் எளிதாக மறக்கப்பட்டு விடுகிறது, நமக்கு முள்ளிவாய்க்காலே மறந்து விட்டதே! ஏதோ "நக்கீரன்", "ஜூவி" விற்பனை குறையும் பொது பிரபாகரன் படம் / செய்தி போட்டு கல்லாகட்டுவதால் அவர் முகம் மட்டும் ஞாபகம் இருக்கிறது. தங்கதுரையின் நீதிமன்ற வாதம் தேடி படிக்க கூடிய ஒன்று.  எத்தனை தேர்ந்த முதிர்ச்சியான வாதங்கள் ? நீதிபதி பேசியிருக்க முடியுமா என்ன? அத்தனை மரணங்களும் இப்படி வீணாய் போவதற்குத்தான் நிகழ்ந்தன என்பதை இன்னும் நம்ப முடியவில்லைதான் / ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும், தெய்வத்தான் ஆகாது எனினும்" வள்ளுவன் சொன்ன "மெய் வருத்த கூலி" இவ்வளவு தானா? 

"மதுவிலக்கு அமலுக்கு வரும்", மோடி தான் அம்மாக்கு அட்வைசர், சுதந்திர தினத்துக்கு அப்புறம் பாருங்க... ரெத்தத்தின்ரெத்தங்களை மிஞ்சக்கூடிய அம்மா ஆதரவாளர்கள் வாதம் கேட்டு ஆசனவாய் சிரித்துவிட்டது. இவர்களுக்கு அரசியல் தெரியவில்லையா? இல்லை நம்மிடம் அரசியல் செய்கிறார்களா? அப்படியே மதுவிலக்கு அமலுக்கு வந்தாலும், அம்மா ஆட்சியில் கடிவாளம் இல்லாது இயங்கும் காவல்துறைக்குத்தான் "கள்ளு" ஊத்திவிட்ட கதையாகும். கவுன்சிலர்கள் எல்லாம் கள்ளச்சாராய அதிபர் ஆவார்கள், காவல் அதிகாரிகளின் வீடுகள் அன்பளிப்புகளால் நிரம்பி வழியும், "ஆட்டோ சங்கர்"கள் மீண்டும் உருவக்கப்படுவார்களே அன்றி வேறு ஒன்றும் நிகழாது என்பதை சுட்டிக்காட்டினால் "நெகட்டிவ் பேர்வழி" முத்திரை குத்திவிடுவார்கள். மேல்வாயை மூடிக்கொண்டு ஆசனவாயிலேயே சிரித்துக்கொள்ள வேண்டியதுதான். 'மதுபானக்கடை' படம் பார்த்துவிட்டு கட்டிங் அடிக்க போகிறவர்களும், கட்டிங் அடித்துவிட்டு, குவாட்டர் வாங்கி அரை பாட்டில் பெப்சியில் கலக்கி எடுத்துகொண்டு 'மதுபானக்கடை' படம் பார்க்க செல்பவர்களும் என முதிர்ச்சியுற்ற நம் சமூகத்தில் அறிவுரை என்பது "பைத்தியக்கார புலம்பல்" என்பதை நல்லவேளையாக "மதுப்பானக்கடை" இயக்குனர் அறிந்து வைத்திருக்கிறார்.

உணவகங்களில் எச்சில் தட்டு கழுவி விட்டு, பாத்திரம் கழுவும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு காஞ்ச சப்பாத்தியை உள்ளே தள்ளி கொண்டிருக்கும் ஐந்தாயிரம் சம்பளம் வாங்கும் மிசோரம்காரனும், மாதவிலக்கோ, உயிர்பறிக்கும் வயிற்றுவலியோ, நாள் முழுக்க நிற்பதால் நரம்புகள் சுண்டியிழுக்கும் வேதனைகளையும் மறைத்துக்கொண்டு பேரங்காடிகளுக்கு உடை வாங்க வருபவர்களுக்கு சிரித்தபடி பரிந்துரைகள் செய்து, ஒரு சட்டை எடுக்க ஏழு சட்டைகளையும் இரண்டு கால் சட்டைகளையும் அணிந்து பார்த்துவிட்டுச்செல்வதை, எடுக்கும் துணிக்கு கொடுக்கும் மேலதிக விலைக்கான சமாதானமாய் எடுத்துகொள்ளும் நாம், கலைத்து போட்டு செல்வதை எல்லாம் மடித்து வைத்து இரவு பதினொன்னரை மணிக்கு சாப்பிடபோகும், ஆரயிரத்தி ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் அசாம்காரிகளும் பூனேயிலும் பெங்களூரிலும் தாக்கப்படுகிறார்கள்.ரம்ஜானுக்கு முன்பு ஊரை காலி செய்துவிட்டு ஓடிவிடுங்கள் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். இதற்காகவா மெக்கா பார்த்து வணங்கும், மெல்லிய இழையால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தை நபிகளார் வழிநடத்தினார்? 

இவ்வகையான தேசத்தில் வாழ்வதே வாழ்நாள் சாதனையாக இருக்கும் பொழுது ஒலிம்பிக்கிற்கு செல்ல ஆள் இல்லை என்பதொன்றும் பெரும்குறையில்லைமுட்டை ஓட்டை உடைத்து வெளிவரும் கோழிகுஞ்சு பருந்துக்கு பயம் கொள்வதை போல அனிச்சயாய் நமக்கு இந்த "விலகி நிற்கும்" புத்தி வாய்த்துவிட்டதில் ஆச்சரியமொன்றுமில்லை.

 நம்மை பாதிக்காதவரையில் எதுவும் நம்மை பாதிக்காது.

* இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

-ரகு

12 comments:

 1. மனசுல இருக்குறதெல்லாம் கொட்டுறதுக்கு எழுத்துதான் நல்ல வழி. அதுலயும் இந்த மாதிரிப் பதிவுகள் ரொம்பவே நல்ல வழி.

  எங்கருந்தோ வந்த சேட்டானுக கோடிக்கோடியா கொழிக்கிறாங்க. மலையாளிகள் புதுசு புதுசா நகைக்கடைகளைத் திறந்து துட்டு பாக்குறாங்களே. அவங்களே அந்த நகைகளை அடகு பிடிக்க வட்டிக்கடைகளைத் தெறந்து வாழ்வோ வாழ்வுன்னு வாழ்றாங்க.

  ரொம்பக் கொறைச்சலா மாசச்சம்பளம் வாங்கிப் பொழைக்கும் வடகிழக்குக்காரன் இருக்கக் கூடாதா! ஒன்னு தெரியுமா.. இந்த வடகிழக்குக்காரங்க ஓரளவு நல்லாத் தமிழ் பேசவும் முயற்சி பண்றாங்க. இந்த மாதிரி வந்தாரைத்தான் ஆதரிக்கனும். அதுதான் பெருமை.

  இவங்களை எந்த மதத்துக்காரன் எதுத்தாலும் அவன நான் எதிர்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உலகில் எல்லா மூலையிலும் இப்படி பொருளாதார தாழ்நிலை மக்கள், வந்தேறிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு விரட்டப்படுவது நடக்கிறது. என்ன, நம் கண்முன்னே நிகழும் போது கூட "உச்" கொட்டிவிட்டு நமது வேலையே பார்க்குமளவு நமது தோல் கெட்டிப்பட்டுவிட்டது என்பதை தான் ஏற்றுகொள்ள இயலவில்லை.

   Delete
 2. //அனிச்சயாய் நமக்கு இந்த "விலகி நிற்கும்" புத்தி வாய்த்துவிட்டதில் ஆச்சரியமொன்றுமில்லை// உண்மை..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்! சமீபத்தில் கூட விடுமுறை நாளொன்றில், பள்ளிக்கரணை பக்கம் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு சுமையூந்து நிறைய குப்பைகளை கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தார்கள், யாரும் கவனிக்க்கவில்லை, கவலைப்படவில்லை, நானோ கவனித்தும் அதை தடுக்கவோ, புகார் செய்யவோ எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை.(இத்தனைக்கும் அதைபற்றி கட்டுரை எழுதி கைதட்டல் வாங்கி இருக்கிறேன், குற்ற உணர்வு பிடுங்கி தின்னுகிறது) இப்படிப்பட்ட ஒரு இயல்பு நமக்குள் எப்படி ஊறிப்போனது என்றுதான் தெரியவில்லை.

   Delete
 3. பொதுமையான சொல்லாடல்களில் தான் தனித்துவமான "சுயம்" தொலைந்து போகிறது... இங்கு சுயம் தொலைப்பதே வாழ்வு நெறியாகி விட்டதே.

  நாட்டின் தலையாய பிரச்சனைகளை படித்தாகி விட்டது.. அடுத்து ஆகக்கூடியத்தை பாப்போம் என்ற அளவில் தான் நம் சுயம் இங்கே இருக்கிறது. அதைப்பற்றி பதிவெழுதும் ஒரு இணைய பொறுப்பாளியாக நீங்கள் இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி.

  இரெண்டொரு கீச்சோடு நானும் குப்பைக்களை வாரிக்கொட்டியதோடு புது குப்பைகளை சேகரிக்க கிளம்பி விட்டேன். மனத்தில் எண்ணங்களுக்கு வறட்சி ஏற்பட்டாலும் நாட்டினில் குப்பைகளுக்கு ஏது பஞ்சம்...?

  நாட்டின் தலையாய பிரச்சனைகளை கண்டு மனம் நோவதை விட அதை இந்த அரசு கையாளும் விதம் நிறையவே எரிச்சலூட்டுகிறது என்பது என் மனநிலை.. அதை நீங்களும் அனுபவித்துள்ளீர்கள் போலும்.
  அருமையாய் எழுதி
  மனத்தில் தீயை விதைத்து விட்டீர்கள் ..!!

  அரசியல்வாதிகளின் இந்த சாதக அரசியலும், சாதனை விழாக்களும் மக்களை.. நாட்டினை முன்னேற்றப்பாதையில் என்றும் இழுத்துச்செல்லாது. தம் நாட்டினிலே தம் மக்களை அகதியாக பார்க்கும் நிலை இலங்கைக்கு அடுத்து இந்தியாவிற்கும் வாய்த்துள்ளது.

  எனக்குஇலங்கை தமிழனான ஈழத்தமிழனை பற்றி கவலை இல்லை. ஆனால் என் நாட்டு மக்களான அசாம் திரிபுர மக்களை பற்றி நிறைய கவலைப்படுவேன். எனது நாட்டை நேசித்தாலும் அசாம் திரிபுர சகோதர மக்களின் இந்நிலைக்கு என் அரசை வெறுக்கின்றேன்.

  அவ்வப்போது கீச்சினில் அரசை கடித்து கொதறினாலும்.., இதுவும் ஒரு வடிகால் தான் எனக்கு. ...........//குப்பையாய் நிறைந்து கிடக்கும் எண்ணத்தை எல்லாம் கூட்டிப்பெருக்கி வெளியில் கொட்டி விட்டேன் .....//  ReplyDelete
  Replies
  1. எதுவும் செய்ய இயலாத என் கையாலாகாதணத்தை இப்படி கட்டுரை எழுதி மறைத்து கொள்ளுகிறேன் என்பதே உண்மை.

   அரசியல்வாதிகள் எல்லாப் பிரச்சனைகளியுமே அவர்களுக்கு சாதகமான திசையில் மட்டுமே அணுகுகிறார்கள், அணுகுவார்கள். மக்களாட்சியில் மக்களுக்கு தான் பொறுப்புகள் அதிகம், அரசியல்வாதிகளை குறை சொல்வது பொறுப்பை தட்டி கழிப்பது தான். மன்னராட்சியில் மக்களை குற்றம் சொல்லும் முட்டாள்தனத்துக்கு ஈடு, மக்களாட்சியில் ஆளும் வர்க்கத்தை குற்றம் சொல்வது.

   ஈழத்தமிழன் பற்றி கவலை இல்லை என்று சொல்ல்யிருந்தீர்கள், சிலருக்கு இனம் பிடித்திருப்பதை போல, உங்களுக்கு தேசியம் பிடித்திருப்பதாகத்தான் என்னால் எண்ண முடிகிறது. இது சரி தவறு அல்ல, ஒன்றுக்கு ஒன்று எதுவும் மேம்பட்ட நிலை இல்லை என்பதே என கருத்து. நமக்கெல்லாம் மொத்தத்தில் மனிதம் பிடித்தால் ஒருவேளை எல்லாம் நல்லபடி அமையும்.

   Delete
  2. உண்மை என்னவென்றால். அயல்நாட்டு மக்களின் நிலை பற்றி நாம் பரிதாபப்படத்தான் முடியுமே தவிர.....
   அவர்களுக்கான வழிமுறைகளை அவர்களது அரசாங்கம் தான் செய்து கொடுக்குமே தவிர...
   நமது அரசாங்கத்தை அவர்களின் மேல் அழுத்தம் தர நிர்பந்திப்பதை தவிர்த்து, நம்மால் ஒன்றும் செய்ய இயலாது...!!
   ஒரு நாட்டின் மேல் அழுத்தம் தர என்னமாதிரியான உலகசூழல் இருக்கிறது என்பதையும் நாமறிவோம்.

   நீங்கள் சொன்னபடி .. அரசாங்கத்திருக்குத்தான் மனிதம் பிடிக்க வேண்டும்.. !! சராசரியான தனிமனிதனுக்கு என்றுமே மனத்தில் மனிதம் இருக்கிறது.

   Delete
 4. சூர்யா மருத்துவமனையில் என் தாயை சமீபத்தில் செர்த்திருந்தபோழுது அந்த அறையை இந் முகத்தோடு சுத்தமாக கூட்டித் துடைத்த நபரை, எனக்குத் தெரிந்த இந்தியில் அவர் எந்த ஊரில் இருந்து வருகிறார் என்று விசாரித்தேன், மிசோரம் என்றார். வேறு ஒரு தமிழ் பேசும் ஆயாவும் வரும். அதன் வேலையில் சுத்தம் இருக்காது. நான் செல்லும் அழகு நிலையத்தில் சிரித்த முகத்தோடு என் புருவத்தைத் திருத்தும் பெண்ணும் வட கிழக்கு மாநிலத்தவர் தான். அமெரிக்காவில் மெக்சிகோவில் இருந்து வரும் தொழிலாளர்களை கடைநிலை வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு உரிய மரியாதையும் கொடுக்கமாட்டார்கள். இங்கே நம் நாட்டவரையே இப்படி பாகுபடுத்திப் பார்க்கிறோம்.

  எங்கும் ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை. ஆனால் அதைக் கண்டும் வாளாவிருப்பது நாம் செய்யும் பெரும் தவறு.

  ரொம்ப நல்ல பதிவு ரகு, வாழ்த்துகள் :-)

  amas32

  ReplyDelete
  Replies
  1. இது யதார்த்தம் தான் அம்மா, தமிழ்நாட்டுக்கு வெளியே இவ்வாறான வேலை செய்யும் தமிழ் நாட்டு மக்கள் கூட மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொண்டதை பார்த்துள்ளேன். உள்ளூரில் இருப்பதால் வேலை என்பது, வாழ்வியல் என்பதை கடந்து சலிப்பு மேலிட செய்து விடுகிறது.

   என் தந்தையின் உணவகத்தில் கூட சிறுது காலம் ஒரு அசாம் சிறுவன் வேலை செய்தான், இலை எடுப்பது, கடையை கூட்டுவது,கழுவுவது என எல்லா வேலைகளும் செய்வான், இரவு கடையை அவனோடு நானும் கழுவுவேன், தினமும் சம்பர்தாய நிகழ்வாக நிகழும் அந்த வேலையில் கூட அவன் முழு ஈடுப்பாட்டோடு செய்வான், கறை போகும்வரை, போதும் வா என்று சொன்னால் கூட வரமாட்டான். அவன் நிறைய கதைகள் சொல்லுவான், ஏமாந்த கதைகளே அதில் நிறைய இருக்கும். இவர்கள் எப்படி எந்த நம்பிக்கையோடு இத்தனை ஆயிரம் கிலோமேட்டார் தூரம் பயணம் செய்து மொழி தெரியாத ஒரு ஊரில் தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள்? அந்த நம்பிக்கையை நாம் எவ்வாறு வீணடிக்கிறோம்?

   மக்கள் தம் "பொருளாதாரம்" என்பதை தாம் சார்ந்த பகுதிகளில் இருந்தே பெற முயல வேண்டும்.

   Delete
 5. நம்மை பாதிக்காதவரையில் எதுவும் நம்மை பாதிக்காது என்று நாமெல்லாம் வாழப்பழகி வெகுநாட்களாகிவிட்டது. எவ்வளவு உண்மையான வரிகள் ..
  அறிவுக்கும் மனதிற்கும் இடைப்பட்ட இடைவெளியை நிரப்பும் வரை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் குணம் மாறாது.
  நமது கைலாகத் தனத்தை நச் என்று சொல்லி இருக்கிறாய் ரகு ...

  ReplyDelete
 6. What I liked abt the post is that the perspective you provided..Pls continue (sorry tamil font makkar pannuthu :))

  ReplyDelete
 7. நான் பார்த்த வரையில் இந்திய வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உழைப்பை நம்பியே வாழ்கிறார்கள். அவர்களும் ஒருநாள் யூதர்கள் போல் உலகத்தை வியக்கவைப்பார்கள். எந்த அரசியல் ஒடுக்குமுறையாலும் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் குறைக்க முடியாது. நல்லதோர் பதிவு தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete