Monday, November 04, 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழ் - ஜெமோ எதிர்வினை - என் எதிர்வினை

நவம்பர் 4, 2013 தேதியிட்ட தி இந்து (தமிழ்) நாளிதழில் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?   என்ற இந்தக்கட்டுரை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதியிருப்பதை படித்துவிட்டு என் எதிர்வினையை ட்விட்டரில் https://twitter.com/raguc_/status/397251989148418048 இவ்வாறு பகிர்ந்தபின்னரே, ஜெமோ தானே "எதிர்வினைகள்" என்ற தலைப்பில் https://twitter.com/jeyamohanwriter/status/397251274107666432 இவ்வாறு எழுதியிருப்பதை காண நேர்ந்தது. 

தமிழ் இலக்கியதளத்தில் தற்காலத்தில், தனக்கு நிகர்... தானே என்று எண்ணிக்கொள்ள ஜெமோ அவர்களுக்கு உரிமை மட்டுமல்ல, தகுதியும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தமிழ்ச்சூழலின் சிந்தனைதளத்தில், தானே சிகரம் என எண்ணிக்கொள்வதற்குமுன், அவர் சற்று சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். அச்சுயபரிசோதனை காந்தியத்தின் சுயபரிசோதனை எனப்படும் ஆன்ம தேடல்போல அல்லாமல் பகுத்தறிவின் விதிகளுக்கு உட்பட்டு அமைந்தால் வரவு தமிழ்ச்சமூகத்திற்கே.

சரி. மூலக்கட்டுரை வாதிடுவது எழுத்துருமாற்றம் தமிழுக்கு நன்மை பயிர்க்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இவ்வகை மாற்றங்கள் இயல்பானது (பிராமி-வட்டெழுத்து-தற்கால எழுத்துரு-ஆங்கில எழுத்துரு) என்கிறார். எதிர்வினைக் கட்டுரையில் இதை யார்யாரெல்லாம் எதிர்ப்பார்கள் என அவரே பட்டியலிட்டிருக்கிறார். அவர்கள் முறையே 1. (வருங்காலம் அறியா) மொழிவெறியர்கள் 2. முரட்டு மூடர்கள் 3. இணைய மொன்னைகள் (வார்த்தை உபயம்:ஜெமோ). 

மேற்சொன்ன வரிசையை கவனித்தோமேயானால் ஆய்வாளர்களோ, மொழியியல் அறிஞர்களோ, பண்பாட்டியல் நிபுணர்களோ இந்தக்கட்டுரைக்கு எதிர்வினையாற்றக்கூடும் என அவர் கிஞ்சித்தும் நம்பவில்லை. அவர்களின் கேள்விகள்/எதிர்வினைகள் எவ்வாறிருக்கும் என ஆராய்ந்து, அதற்கான பதில்கள் தரப்படவில்லை. தன் வாசகர்களாயிருக்கும் அவர் பட்டியலிட்ட மூன்றுவித மக்களிடையே சலசலப்பேற்படுத்தவே இம்மாதிரிக்கட்டுரைகள் எழுதுகிறார் என சில இணைய மொன்னைகள் சொல்வது உண்மையாயிருக்கலாம்.

இனி அந்தக்கட்டுரைக்கு என்னுடைய சில எதிர்வினைகள். இதற்கு ஜெமோ பதில் சொல்வாரா எனத்தெரியாது, ஆனாலும் யாரேனும் பதில் சொன்னால் நன்று.

1. ஆங்கிலப் புத்தகங்கள் ஒரே நாளில் 2000 விற்கிறது, தமிழ்ப்புத்தகங்கள் ஓர் ஆண்டில் 500 கூட விற்கப்படுவது இல்லை.

ஓர் ஆண்டில் வெளிவரும் எத்தனையோ ஆங்கிலப்புத்தகங்களில் உலகளவில் வெற்றிபெற்ற ஒருசில புத்தகங்கள், இங்கு வெளியாகும் போது அதன் மீதான விளம்பரம், அதன் உலக வர்த்தகசாதனை காரணமாக இங்கு முன்பே பிரபலமடைந்து இருப்பதால் அவ்விற்பனை சாத்தியப்படுகிறது. மாறாக புதிதாக வெளிவரும் தமிழ்ப்புத்தகங்களோ, எழுத்தாளனின் பெயருக்காகவே வாங்கப்படுகிறது. மேலும் ஆங்கிலப்புத்தகங்கள் வாங்குவோரில் கணிசமானோர் உயர்த்தட்டு, மேல்நடுத்தரமக்கள் என்பதும், அவர்களுக்கு தமிழ் ஒவ்வாமை என்பதும் நாம் அறிந்ததுதானே? மேலும் ஆங்கிலப் புத்தகங்கள் பெரும்பாலும் 300 பக்கங்களுக்குள்ளும் 300 ₹ க்குள்ளும் இருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்கள் பக்கத்துக்கும் விலைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கின்றன. ராஜேஷ்குமார் நாவல்களின் வெற்றியில் அதன் குறைந்த விலைக்கும் பெரும்பங்கு உள்ளதை மறுக்கமுடியாது. ஒரு சினிமாவுக்கு 200₹ செலவு செய்பவன் புத்தகத்திற்கு செலவு செய்யக்கூடாதா என்பது எதிர்க்கேள்வியாக எழக்கூடும். 3-5 கோடி செலவுசெய்து எடுக்கப்படும் படம் 200 ₹ க்கு ஒருவருக்கு காண்பிக்கப்படுவது உண்மையில் மலிவுதான். இளையதலைமுறை ஏராளமாக வாசிக்கிறது, ஆங்கிலத்தைக்காட்டிலும் தமிழில்தான் அதிகம் என்பது இங்கு வழக்கில் இருக்கும் தினசரி, வாரந்திரிகள் மூலம் தெரியவில்லையா? நூற்றாண்டை நோக்கி நடைபோடும் The Hindu ஆங்கில நாளிதழ், தமிழில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நாளிதழ் வெளியிடக் காரணம் என்ன? கிழட்டுத்தலைமுறைக்காகவா? ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழாவில் அதிகம் விற்பனையாகிறதே. இங்கு இன்னொரு பிரச்சனை, தட்டச்சத்தெரிந்தவன் எல்லாம் எழுத்தாளராக ஆசைப்படுகிறான். தமிழில் அத்தனை எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள், எனக்கேகூட இரண்டுமுறை அவ்வெண்ணம் எழுந்து, அதை மாற்றிக்கொண்டு தமிழ்  இலக்கியச்சூழலை மயிரிழையில் காப்பாற்றியிருக்கிறேன். காசு கொடுத்து வாங்கும் புத்தகம் தரமானது என்ற எண்ணம் வந்தால்தான் மேலும் வாங்கத்தோன்றும். முதலில் நூலகங்கள், புத்தகங்கள் கொள்முதல்செய்வதை நிறுத்திவிடுவதே தரமான எழுத்தாளர்கள் வர வழிவகுக்கும். நூலகங்கள் இருக்கும் தைரியத்தில்தான் பல எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்... எல்லோரும் பதிப்பகம் ஆரம்பிக்கிறார்கள். 

2. இளமையில் இரண்டு மொழிகளைக்கற்பது சிரமம் / கடினப்பயிற்சி மூலமே மொழி வசமாகிறது / எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கலைக்கூத்தாட்டப்பயிற்சி.

 "இளமையில் கல்" என்கிறது தமிழ். ஜெமோ அது சிரமம் என்கிறார். சிரமம்தான் ஆனால் அதுதான் கற்கும் வயது. மேலும் அவ்வயதில் இப்படி வேறு வேறு எழுத்துரு என்று பயில்வதன் மூலம் மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் பிற்காலத்தில் நமக்கு பன்முகத்தன்மையுடன் ஒரு வினைக்கு பல எதிர்வினைகள்பற்றி யோசிக்கும் திறன் ஆங்கில, அமெரிக்கர்களை விட அதிகம் உள்ளது. எழுத்துருவின் கடினத்தன்மையால் அல்லாமல் மொழியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், பாடத்திட்டம் போன்றவைதான் மொழிப்பாடங்களில் ஆர்வமின்மைக்குக் காரணம். எத்தனையோ சுவையாரமானசந்தம்பொதிந்த தமிழ்ப்பாடல்கள் இருக்க வறட்டுப்பாடல்களை குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டு மனப்பாடத்திறனுக்கு மதிப்பெண் இடுவது யாருடைய மடத்தனம்? கடினமான கலைகளை சிறுவயதில் கற்பதன்மூலம் வளம்பெறும் மூளை என்பது தானே யதார்த்தம். பதார்த்தத்தை சுவையுற சமைக்கத்தெரியாமல், பரிமாறவும் தெரியாமல், பந்தியில் இருப்பவனை குற்றம் சொல்லிப் பலனில்லை ஜெமோ.

3. இணையத்தில் தட்டச்சு செய்பவர்கள் அனைவரும் ஆங்கிலம் ஊடாக தமிழில் தட்டச்சு செய்கிறார்கள்

இணைய பயனீட்டாளர்களை இரண்டாகப் பிரித்தால், ஒருபகுதி கணினிவழி இணையப்பயனீட்டாளர்கள். மற்றொருபகுதி mobile devices எனப்படும் அலைபேசி, மாத்திரை வழியே இணையம் பயன்படுத்துபவர்கள். இவர்களில் இந்த இரண்டாவது பகுதியினர் மிக வேகமாக வளர்ந்து வருகிறவர்கள். இதில் கணினியில் எத்தனை மென்பொருள் வந்தாலும் உள்ளீட ஆங்கிலத்தட்டச்சுக்கருவி வழிதான் செய்ய வேண்டும். நீங்களும், நீங்களறிந்த ஃபேஸ்புக் செயல்பாட்டாளர்களும் இவ்வாறு கணினிவழி உள்ளீட்டாளர்களாய் இருக்கவேண்டும், ஆனால் நீங்களும் அவர்களும் இளையதலைமுறை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான இளையதலைமுறை அலைபேசிகளில் தமிழ் பயன்படுத்துகிறது. இங்கு நேரடித் தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள் வந்தபோது உளமகிழ்ந்தவர்கள் இவர்களனைவரும். அதற்குமுன் வேறு வழியின்றி, ஆங்கிலம் ஊடாக தமிழை உள்ளீட்டு வந்த இவர்கள் அனைவரும் ஒரே இரவில் நேரடித் தமிழ் உள்ளீட்டிற்கு மாறிவிட்டனர். தமிழ் உள்ளீட iOS மற்றும் AndroidOS-களில் உள்ள மென்பொருட்களே இதற்கு சாட்சி. (இந்தக்கட்டுரை முழுக்க முழுக்க அலைபேசிவழி, நேரடித்தமிழ் உள்ளீட்டின் வழியாக எழுதப்பட்டது). இளைய தலைமுறையைப் புரிந்துகொண்டு, பின்னர் அவர்கள்மீது குற்றம் சாட்டலாம். 

4. தமிழ்  எழுத்துருக்குப் பதிலாக பள்ளிகளில் ஆங்கில எழுத்துரு.

இவ்வாறு செய்வதன்மூலம் தமிழைக் கற்றல் எளிதாகும் என்கிறீர்கள். எப்படி? சரளமாக எழுத, வாசிக்க முடியும் என்கிறீர்கள். ஆனால் இதுவே எழுத்துப்பிழைகள் மலிந்து மொழி சிதைய வாய்ப்பளிக்காதா? இந்தப்பரிணாமத்தில் மொழி வளரும்போது, மன்னிக்க... மொழி சிதையும்போது இலக்கியச்சுவையை உணரவே இயலாது. மேலும் கணினி ரீதியாகவும் ஒரு சிக்கல் உண்டு. இப்போது 'க' என்ற எழுத்துக்கு யுனிக்கோட் ஒரு பைட் தருகிறது. உங்கள் வழிமுறையில் "ka" என்பதற்கு இரண்டு பைட் வேண்டும். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் தற்போதுள்ள நான்கு "க" க்களை பயன்படுத்த தற்போது 4 பைட் போதும்., உங்கள் வழிமுறையில் கிட்டத்தட்ட 9-10 பைட் இடம் தேவையாகும். தமிழை எளிதாகவும் ஆர்வமாகவும் கற்கும்படி செய்தாலே... இந்த மூக்கை,  தலையைச்சுற்றித் தொடும் வேலை தேவையிராது. 

5. மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுகின்றன... இந்தியவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டால், பெரும்பாலான மொழிகளை மிகச்சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்.

இதுதான் போகிறபோக்கில் பொய் சொல்வது. வாசிக்க முடியும், புரிந்து கொள்ள முடியாது. மொழி தெரியாத வரை நிச்சயம் புரிந்துகொள்ள முடியாது. வாசிக்க மட்டுமே முடியும். இதனால் என்ன பயன்? மலையாள மொழியின் எழுத்துருவை, வெறும் சூர்யாடிவி செய்திகள் பார்த்தே கற்றுக்கொண்ட நண்பனின் ஆர்வத்திற்குப் பின்னால் காதல் இருந்தது. ஆக, மொழியை அதன் எழுத்துருவில் அப்படியே கற்க ஆர்வமே அவசியம். 


ஆர்வமேற்படுத்தும் வகைப் பாடத்திட்டமே முக்கியம். சீன மொழியில் 3000 எழுத்துருக்களுக்குமேல் உண்டு, கற்பது மிகக்கடினம் என்று நினைத்திருந்த என்னை, இது முழுக்க "pictorial representation of objects" என்று சொல்லி, கற்றுக்கொடுத்தார் என் சீனமொழி ஆசிரியை. ஆக, கற்பிப்பவர் கையில் இருக்கிறது சூத்திரம்.

இன்னும் எழுத ஆவல், மொபைலில் தட்டச்சி கை வலிக்கிறது. 

-தொடரலாம்

No comments:

Post a Comment